சோழவாண்டிபுரம் ஊராட்சியில் நிதி முறைகேடு புகார் எதிரொலி:வங்கி காசோலையில் கையொப்பமிட 2 அதிகாரிகளுக்கு அனுமதிகலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவு

சோழவாண்டிபுரம் ஊராட்சியில் நிதி முறைகேடு புகார் காரணமாக வங்கி காசோலையில் கையொப்பமிட 2 அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-09 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் சோழவாண்டிபுரம் ஊராட்சியில் முறைகேடு நடைபெறுவதாக பொது மக்கள் புகார் மனு கொடுத்தனர். அதன்அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆகியோர் சோழவாண்டிபுரம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி பதிவேடுகள் முறையாக பராமரிக்காமல் இருப்பதும், செலவு செய்ததற்கான ரசீதுகள் இல்லாமல் செலவினம் மேற்கொள்ளப்பட்டதும், நிதி முறைகேடு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவின்படி ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி சோழவாண்டிபுரம்ஊராட்சி நிதியில் இருந்து விதிகளுக்கு முரணாக செலவுகள் மேற்கொள்வதை தடுக்கும் பொருட்டு ஊராட்சியில் பராமரிக்கப்படும் அனைத்து கணக்கு பி.எப்.எம்.எஸ். மற்றும் வங்கி காசோலைகளில் சோழவாண்டிபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரும் கையெழுத்திடுவது தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த ஊராட்சியில் பராமரிக்கப்படும் அனைத்து கணக்கு பி.எப்.எம்.எஸ். மற்றும் வங்கி காசோலைகளில் கையொப்பமிட திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் 2-ம் நபர் கையொப்பமிடும் அதிகாரத்தை சோழவாண்டிபுரம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்