கள்ளக்குறிச்சியில் நலிவுற்ற முஸ்லிம்களுக்கு ரூ.5½ லட்சம் நிதி உதவி கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்

கள்ளக்குறிச்சியில் நலிவுற்ற முஸ்லிம்களுக்கு ரூ.5½ லட்சம் நிதி உதவியை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

Update: 2023-04-21 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை சார்பில் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக நலிவுற்ற முஸ்லிம்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் (பொறுப்பு) சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் நலிவுற்ற 33 முஸ்லிம்களுக்கு சிறு தொழில் செய்ய ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த பின் தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிர்களுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலெக்டர் தலைமையில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

குறைந்த வட்டியில் கடன்

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன் முறையாக முஸ்லிம் மகளிர் சங்கம் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையின முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சுய தொழில் மூலம் வருமானம் ஈட்டும் வகையில், கதர் கைவினை பெருட்கள் மற்றும் சிறு தொழில் ஆகியவற்றில் வெவ்வேறு பயிற்சிகள் அளித்திடவும், ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கவும், முஸ்லிம் மகளிர் சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலமாக நலிவுற்ற முஸ்லிம் பெண்களுக்கு சிறிய வியாபாரம் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அதிகபட்சமாக ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வசூல் செய்து, வங்கி கணக்கில் செலுத்தினால் இதற்கு இணை மானியமாக இருமடங்கு தொகை ரூ.20 லட்சம் அரசு மானியமாக வழங்குகிறது. இதன் மூலமாக நலிவுற்ற முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் பெருளாதாரத்திற்கு உதவி புரிதல், ஆதரவற்ற முஸ்லிம் மற்றும் வயதான முதியோருக்கு உதவி புரிதல் உள்ளிட்ட நிதியுதவிகள் சங்க நிதிநிலைமைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்க செயலாளர் ஷகிலா பேகம், இணை செயலாளர்கள் சுபைதா, ஷாஜிதா பேகம், உறுப்பினர் நஸிமா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்