பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-12 18:45 GMT

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) வகுப்பை சே்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முதுகலை பட்டப்படிப்பு, 3 ஆண்டு பாலிடெக்னிக், தொழிற்கல்வி போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இணைய தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் மாணவர்கள் உள்நுழைந்து ஆதார் எண் அளித்து இ-கே.ஒய்.சி. சரிபார்க்க வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்பட்டால், தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும்.

கல்வி உதவித்தொகை இணையதளம், புதுப்பித்தலுக்கு வருகிற 18-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் மாணவர்களால் அடுத்த மாதம் (நவம்பர்) 18-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம். ஆகவே இந்த கல்வி உதவித்தொகை திட்டங்களில் தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்