மாற்றுத்திறனாளிக்கு தேவையான உதவிகளை செய்ய கலெக்டர் உத்தரவு

மாற்றுத்திறனாளிக்கு தேவையான உதவிகளை செய்ய கலெக்டர் உத்தரவு

Update: 2022-11-21 19:39 GMT

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மாற்றுத்திறனாளி கோரிக்கையை ஏற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவருக்கு தேவையான உதவிகளை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

மாற்றுத்திறனாளி

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உப்பு விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வசித்து வந்த செல்வம், அவரது மனைவி பெரியநாயகி மற்றும் அவர்களது மகன் பிரசாந்த் ஆகிய மூவரும் அடுத்தடுத்து இறந்து விட்டனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன் (வயது25) என்ற மாற்றுத்திறனாளி தனக்கு சொந்தமான ஒரு வீட்டில், அவரது அத்தை வள்ளி என்பவரின் பராமரிப்பில் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

தனக்கு குடியிருக்க ஒரு சிறிய வீடும், பிற இடங்களுக்கு செல்வதற்கு 3 சக்கர வாகனமும் ஏற்பாடு செய்து, தனக்கு உதவி செய்யுமாறு தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்த செய்தி படத்துடன் நேற்று 'தினத்தந்தி'யில் பிரசுரமானது.

உடனடி நடவடிக்கை

இதன் எதிரொலியாக தஞ்சை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பேராவூரணி ஒன்றிய ஆணையர் செல்வேந்திரன், பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, துறவிக்காடு கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், மடத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுதாசினி சுப்பையன், கிராம உதவியாளர் ரெங்கசாமி மற்றும் கிராம பிரமுகர் கண்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் அவரது வீட்டை நேரில் பார்வையிட்டு மாற்றுத்திறனாளி பிரகதீஸ்வரனின் கோரிக்கையினை தஞ்சை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், தேவையான உதவிகளை செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததுடன் அதற்கான பணிகளையும் உடனடியாக தொடங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்