ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை- அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-09-13 21:38 GMT

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகளை பொறுத்தவரை மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 641 வீடுகள் உள்ளன. மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவதற்கு 1,032 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் 245 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே வருகிற டிசம்பர் மாதம் வரை கூடுதலாக 787 கொசு ஒழிப்பு களப்பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

சளி, காய்ச்சல்

கொசு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும். இதற்காக தேவையற்ற பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டியில் குளோரின் அளவை சரியான முறையில் சேர்க்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தென்பட்ட பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும்.

அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக சுகாதார செவிலியர்களிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேல்தளத்தில் மழைநீர் தேங்காத வகையில் கண்காணிக்கலாம். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு

தினமும் காலையில் பள்ளிக்கூடங்களில் இறைவணக்கத்தின்போது கொசு உற்பத்தி தடுப்பு குறித்த விழிப்புணர்வு மாணவ-மாணவிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். குடிநீர் பாத்திரங்களை தவிர மற்ற சிமெண்டு தொட்டி, கீழ்நிலை தொட்டி, மேல்நிலை தொட்டிகளில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் நீரை முழுமையாக காலிசெய்துவிட்டு பிளீச்சிங் பவுடர் மூலமாக சுத்தம் செய்து ஒருநாள் கழித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

இந்த கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் சூர்யா, மாநகர் நல அதிகாரி டாக்டர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்