போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெற மெய்நிகர் கற்றல் வலைதளம்கலெக்டர் மோகன் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெற மெய்நிகர் கற்றல் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-19 18:45 GMT

மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மெய்நிகர் கற்றல் வலைதளம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினால் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சிகள், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது வீட்டில் இருந்தவாரே போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மெய்நிகர் கற்றல் வலைதளம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான விவரங்களை இந்த இணையதளம் உள்ளடக்கியது. போட்டித்தேர்விற்கான பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், மாதிரித்தேர்வுகள், பாடக்குறிப்புகள் ஆகியவை உள்ளன. மெய்நிகர் கற்றலுக்கான வலைதளம் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்தளத்தின் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறலாம்.

கல்வி தொலைக்காட்சியில்

மேலும் கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள், போட்டித்தேர்வு வகுப்புகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையும் செய்யப்படுகிறது. இதன் காணொலிகள் TN career services Employment என்ற Youtube சேனலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் இதனை பயன்படுத்தி அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்