சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-08-20 19:19 GMT

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கட்டபொம்மன் நகர், திருநகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமான முறையிலும் அதே நேரத்தில் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் அறிவுறுத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

விழுப்புரம் நகராட்சியுடன் 2011-ம் ஆண்டு புதியதாக இணைக்கப்பட்ட பானாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி, எருமனந்தாங்கல், காகுப்பம் ஆகிய 5 ஊராட்சி பகுதிகளுக்கு ரூ.263 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புதியதாக அமைப்பதற்கு அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.7½ கோடி மதிப்பில் 16 கி.மீ. நீளத்திற்கு 107 இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 22 சாலைப்பணிகள் 3.45 கி.மீ. நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 31 சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

இதேபோல் ரூ.18.74 கோடி மதிப்பில் 219 இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிக்கு அரசால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 30 சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 9 சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. எஞ்சியுள்ள சாலைப்பணிகள், பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதும் அமைக்கப்படும். அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாலை அமைக்கும் பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு அடுத்த மாதத்துக்குள் (செப்டம்பர்) முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் ரமேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்