விச்சூர் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களில் கலெக்டர் ஆய்வு
மணலிபுதுநகர் அருகே விச்சூர் ஊராட்சியில் மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்படும் இடங்களை முன்னெச்சரிக்கையாக நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் கால்வாய் அடைப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.;
கனமழை எச்சரிக்கை
மீஞ்சூர் அடுத்த மணலிபுதுநகர் அருகே சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விச்சூர் ஊராட்சியில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை வெள்ள காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள சூழ்நிலையில், திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமமை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்த விச்சூர் ஊராட்சியில் வெள்ளப்பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாக அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ள பணிகளை முன்னெச்சரிக்கையாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
அப்போது கொசஸ்தலை ஆற்றங்கரையில் ரூ.15 கோடியில் செய்யப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளையும், விச்சூர் ஊராட்சியில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளான எழில்நகர், கணபதிநகர் உட்பட பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று வெள்ள தடுப்பு பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது மணலிபுதுநகருக்கு செல்லும் கால்வாயில் அடைப்பு இருந்ததை பார்த்த கலெக்டர், அதனை அகற்ற ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார், வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணிதிலகம், பொறியாளர் சுந்தரம், சோழவரம் ஒன்றிய ஆணையாளர் குலசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உட்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் மணலிபுதுநகர் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய்களை கலெக்டர் பார்வையிட்டார்.