நாமக்கல் அருகே அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல் அருகே அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் பணி சிறப்பாக நடைபெற்று வருவதை உறுதி செய்யும் வகையில் கலெக்டர் ஸ்ரேயா சிங் தும்மங்குறிச்சி, பெரியூர், நருவலூர் மற்றும் தொட்டிப்பாளையம் அங்கன்வாடி மையங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
மேலும், அங்கன்வாடி மையங்களில் நடைபெற்ற 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை கலெக்டர் நேரில் ஆய்வு பார்வையிட்டு செய்தார். இந்த ஆய்வின்போது 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும், ஊட்டச்சத்து உதவித்தேவைப்படும் குழந்தைகளை தனித்தனியாக கண்டறிந்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் கலெக்டர் டாக்டர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.