மணல் திருட்டை தடுக்க சிறப்புப்படை அமைக்கப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலைதடுக்க சிறப்புப்படை அமைக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2022-08-30 19:34 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலைதடுக்க சிறப்புப்படை அமைக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. அதில் 52 விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

விவசாயம் பாதிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் நகை கடன் வாங்கி உள்ளனர். அதனை அதிகாரிகள் மீட்க சொல்கின்றனர். வட்டியை மட்டும் கட்டி திரும்ப வைக்க மறுப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா ஆடுகள் அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை மாற்றி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து ஏரிகளும் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி தாலுகா ஏரி பகுதிகளில் செயற்கை மணல் தயாரித்து விற்பனை நடக்கிறது. இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தால் அனைத்து தகவலும் மணல் கடத்தும் கும்பலுக்கு உடனுக்குடன் செல்கிறது. இதனால் புகார் தெரிவிப்பவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி பாலாற்று பகுதிகளில் தோல் தொழிற்சாலை கழிவுநீரை ஆற்றில் விடுவதால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் அடியோடு அழிந்து விட்டது. கழிவுநீரை கலக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்க வேண்டும். விவசாயத்துக்கு பயன்படுத்தும் உரங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. உரவிலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். திருப்பத்தூர் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் வேளான் அறிவியல் மையம் மற்றும் விவசாய கல்லூரி அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

சிறப்புப்படை

ஏரி, நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படும். பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மணல் திருட்டை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்த ஒரு சிறப்புப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர் கருவி, பெண் விவசாயிக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள மரச்செக்கு, மேலும் 2 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் கருவியும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாத்திமா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமாவதி உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்