தர்மபுரி மாவட்டத்தில்தரமான சிறுதானியங்கள் கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்வேளாண் துறை கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி பேச்சு

Update: 2023-02-27 19:00 GMT

தர்மபுரி மாவட்டத்தில் தரமான சிறுதானியங்கள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த வேளாண்மை துறை கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி பேசினார்.

1 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகள்

சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி வேளாண்மை துறை சார்பில் தர்மபுரி மாவட்ட அளவிலான சிறுதானிய கருத்தரங்கு மற்றும் கண்காட்சி தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 53,678 ஹெக்டேர் நிலப்பரப்பில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் சிறு குறு விவசாயிகள் சிறுதானிய சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிறுதானிய உணவுகள் 50 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே என்ற கருத்து பரவலாக உள்ளது. உடல் நலனுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

தேவை அதிகரிக்கும்

சிறுதானியங்களை மதிப்பு கூட்டு பொருள்களாக மாற்றுதல், சுவையான பல்வேறு உணவுகளாக சமைத்தல் ஆகியவை குறித்து பொது மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுதானிய நுகர்வு அதிகரிக்கும் போது அதற்கான தேவையும் அதிகரிக்கும்.அப்போது சிறுதானிய சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்கும்.

இந்த கருத்தரங்கில் சந்தை விலையை விட கூடுதலாக சிறுதானியங்களுக்கு விலை கிடைக்கும் வகையில் 3- நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.தர்மபுரி மாவட்டத்தில் தரமான சிறுதானியங்கள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த கருத்தரங்கில் கேழ்வரகு நீங்கலாக பிற சிறுதானியங்கள், நிலக்கடலை மற்றும் பயிறுவகைகள் நேரடி கொள்முதலுக்கு வாங்குவோர்- விற்பனையாளர் சந்திப்பில் 3 நிறுவனங்களுடன் கலெக்டர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணசேகரன், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் பரசுராமன், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா, உதவி பேராசிரியர் தெய்வமணி, அரசு அலுவலர்கள் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு சிறுதானிய ஏற்றுமதி வாய்ப்புகள், மதிப்பு கூட்டுப் பொருட்கள் குறித்து விளக்கி பேசினார்கள். இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்