வேலைவாய்ப்பு, தொழில்நெறி மையத்தில் பயிற்சி பெற்ற5 பேர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வுகலெக்டர் ஸ்ரேயா சிங் சான்றிதழ் வழங்கினார்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனிடையே வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார். மேலும் 2-ம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் அளவீடு சோதனை மற்றும் உடல்திறன் சோதனை தேர்வில் வெற்றி பெறும் வகையிலும், உடற்பகுதி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையும் வகையிலும் 15 மாணவர்களுக்கு 1 கிலோ குளுக்கோஸ், பேரிச்சை, வேர்க்கடலை, 300 கிராம் பாதாம், ½ லிட்டர் தேன் மற்றும் பச்சைப்பயிர் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா மாயவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.