இறந்த வாக்காளர்களின் விவரம் சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இறந்த வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-08 19:30 GMT

இறந்த வாக்காளர்கள்

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் வாக்குப்பதிவுக்கு தேவையான எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட வாரியாக இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது.

இதையொட்டி 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதேபோல் இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் இறந்த வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடக்கிறது.

விவரம் சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த 7 தொகுதிகளிலும் 9 லட்சத்து 16 ஆயிரத்து 285 ஆண்கள், 9 லட்சத்து 68 ஆயிரத்து 393 பெண்கள், 214 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் இறந்த வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் 2 ஆயிரத்து 117 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த அலுவலர்கள் வீடு, வீடாக சென்று இறந்த வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதேபோல் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இறந்த வாக்காளர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. இதன்மூலம் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்