கொய்மலர் விலை வீழ்ச்சி; விவசாயிகள் பாதிப்பு

கொய்மலர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2023-07-30 21:00 GMT

குன்னூர்

கொய்மலர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொய்மலர் சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு மாற்று பயிராக கொய்மலர் சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக சிறு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பசுமை குடில்கள் அமைக்க வங்கி கடன் வழங்கப்பட்டது. நீலகிரியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொய்மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

குறிப்பாக கார்னேசன், லில்லியம், ஜெர்பரா போன்ற கொய் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிற விழாக்களில் மலர் அலங்காரத்திற்கு கொய்மலர்கள் தேவை அதிகமாக இருந்தது. இதனால் உரிய விலை கிடைத்தது. இதற்கிடையே சமீப காலமாக கொய்மலர்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கொய்மலர் சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

விலை வீழ்ச்சி

ஒரு மலர் ரூ.6 முதல் ரூ.7 வரை கொள்முதல் செய்யப்பட்டது. சீசன் காலங்களில் இதை விட விலை அதிகமாக இருக்கும். தற்போது ஒரு மலர் ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சி காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கொய்மலர்கள் அறுவடை செய்யாமல் அப்படியே விடப்பட்டு உள்ளன. இந்த நிலைக்கு திருமண நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அலங்காரத்திற்கு பிளாஸ்டிக் மலர்கள் பயன்படுத்துவதே காரணம் என கூறப்படுகிறது. இதனால் கொய்மலர்கள் தேவை பெரிதும் குறைந்து உள்ளது.

நீலகிரி கொய்மலர் சாகுபடியாளர் சங்க தலைவர் வாகித் சேட் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலில் உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் மலர்களுக்கு தடை இல்லாததால், அவை பயன்பாட்டில் உள்ளன. இதனால் கொய்மலர் சாகுபடியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தோம்.

பிளாஸ்டிக் மலர்கள்

தற்போது குன்னூர் நகராட்சி கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் பிளாஸ்டிக் மலர்களுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்காக சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பிளாஸ்டிக் மலர்களுக்கு தடை விதித்தால் கொய்மலர் சாகுபடி அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்