கோவை குண்டுவெடிப்பு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது
கோவை குண்டுவெடிப்பு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று கைகளை சங்கிலியால் கட்டிக்கொண்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை
கோவை குண்டுவெடிப்பு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று கைகளை சங்கிலியால் கட்டிக்கொண்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
கூட்டத்தில் தேசிய பார்வையற்றோர் இணையம் தமிழ்நாடு மேற்கு கிளையின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமையில் பார்வையற்றோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேசிய பார்வையற்றோர் இணையம் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தமிழக கிளையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.
உறுப்பினர்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
ஆயுள் தண்டனை கைதிகள்
தற்போது உள்ள பொருளாதார சூழலில், அது போதுமானதாக இல்லை. இதனை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்துஸ்தான் மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கைகளை சங்கிலியால் கட்டிக்கொண்டு அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை அடிப்படையில் ஆயுள்தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் முதல் முறையாக தவறு செய்து சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
முழு நேர ஊழியர்
ஆனால் கோவை குண்டுவெடிப்பு கைதிகள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை தமிழக அரசு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் அளித்த மனுவில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் என்ற முறையில் தமிழகம் முழுவதும் சுமார் 11 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு காலத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நேரத்தை நிர்ணயம் செய்து முழு நேர ஊழியராக மாற்ற வேண்டும். தீபாவளி பண்டிகை செலவுக்கு ஒருமாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.