கோவை: 750 கிலோ குட்கா பறிமுதல் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே 750 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

Update: 2022-06-18 12:49 GMT

கோவை,

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு அந்தப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் போலீசார் காபி கடை பஸ் நிறுத்தம் அருகே சென்று சோதனை செய்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததைக் போலீசார் பார்த்தனர். பின்னர் அந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றார்.

உடனே குடோனுக்குள் நுழைந்த போலீசார் அங்கிருந்த ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 750 கிலோ 75 கிராம் குட்காவையும், சொகுசு கார் மற்றும் ரூ. 39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் குடோனில் இருந்த 4 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடினர்.

விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் (வயது 24) மற்றும் கோபால் குமார் (24) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் ஜெகதீஷ் பட்டேல் மற்றும் பரத் பட்டேல் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம் மற்றும் கோபால்குமாரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ஜெகதீஸ் பட்டேல், பரத் பட்டேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்