தென்னை பயிரில் சத்து குறைபாட்டை போக்கும் வழிமுறைகள்
தென்னையில் பயிரில் சத்து குறைபாட்டை போக்கும் வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மாலதி விளக்கம் அளித்துள்ளார்.
தென்னையில் பயிரில் சத்து குறைபாட்டை போக்கும் வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மாலதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்னை சாகுபடி
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 9,500 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாகி வருகிறது. தென்னை வண்டல் மண், செம்மண், கடற்கரை மண் மற்றும் சரளை மண் என பல்வேறு மண் வகைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், மண் வகைகளில் வண்டல் மண், செம்மண் மிகவும் ஏற்றதாகும்.
நன்கு வளர்ந்த தென்னை ஆண்டுக்கு சராசரியாக 540 கிராம் தழை (1.3 கிலோ யூரியா), 250 கிராம் மணி (2 கிலோ சூப்பர் பாஸ்பேட்), 820 கிராம் சாம்பல் (2 கிலோ பொட்டாஷ்) சத்துக்களை நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது.
பயிர் சத்து
மேலும் தென்னை, மாதம் ஒரு இலை, ஒரு பாளை உற்பத்தி செய்யும். எனவே தொடர்ச்சியான பயிர் சத்து தேவைப்படுகிறது. பரிந்துரைக்கப்படும் உரத்தினை அந்த எருவுடன் கலந்து ஆண்டுக்கு 2 தவணைகளில் இடுதல் உகந்தது. இதனால் உர உபயோக திறன் மேம்படுகிறது. தென்னை வளர்ச்சிக்கும் அதன் சீரிய விளைச்சலுக்கும் 20-க்கும் மேற்பட்ட பயிர் சத்துக்கள் தேவைப்படுகின்றன.
தழைச்சத்து தென்னையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மணிச்சத்து தென்னை நாற்றின் அடித்தண்டு பருமனாவதற்கு உதவுகின்றது. அதன் பற்றாக்குறை வேர்களின் வளர்ச்சியை பாதிக்கின்றது. மேலும் பூக்கள் உருவாகும் தேங்காய் முதிர்ச்சி அடைவதும் கால தாமதம் ஆகிறது. தென்னை இலைகளின் மணிச்சத்து 0. 12 சதவீதம் இருக்க வேண்டும். இதன் குறைபாட்டினை தவிர்க்க ஒரு ஆண்டிற்கு நெட்டை ரக தென்னைக்கு மணி சத்து (சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ) வீரிய ஒட்டு தென்னைக்கு மணி சத்து (சூப்பர் பாஸ்பேட் 1.5 கிலோ) இட வேண்டும்.
தொழில்நுட்பங்கள்
சாம்பல் சத்து அதிக காய்கள் பிடிப்பதற்கும், பருப்பு தடிமனாகவும், விளைச்சலுக்கும் உதவுகின்றது. சாம்பல் சத்து குறைபாட்டை போக்க நெட்டை ரக தென்னைக்கு (மூரியேட் ஆப் பொட்டாஷ் - 2 கிலோ) வீரிய ஒட்டு தென்னைக்கு (மூரியேட் ஆப் பொட்டாஷ் - 3 கிலோ) இட வேண்டும். தென்னைக்கென்று தயாரிக்கப்பட்ட தென்னை நுண்ணூட்டக் கலவையினை ஒரு ஆண்டிற்கு ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ வீதம் இடவேண்டும் அல்லது ஒரு மரத்திற்கு 200 மில்லி லிட்டர் தென்னை டானிக்கினை 6 மாத இடைவெளியில் இரு முறை வேர் மூலம் செலுத்த வேண்டும். இதுபோன்ற தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து தென்னை விவசாயிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.