கூட்டுறவு சங்க பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள 4,550 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் பல்வேறு விதமான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 150 கூட்டுறவு சங்கங்களில் 125 கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு சேவை மையமாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சங்கங்களுக்கு ரூ.12 கோடியே 99 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் கடனாக வழங்கப்பட்டு உள்ளன. விவசாயம் சார்ந்த கருவிகள் ஒரு சதவீதம் வட்டியிலும், விவசாயம் சாராத கருவிகள் 4 சதவீதம் வட்டியிலும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளை விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுத்து வருவாய் ஈட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கூட்டுறவு சங்க பணியாளர்கள், விவசாய நோக்கத்துக்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவையற்ற பணிகளை மேற்கொள்வதால், ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் சங்கங்கள் மேலும் அழிவை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையில் உள்ளன. இந்த திட்டத்தின் செயல்பாட்டால் எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படும் நிலையில் சங்க பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதையும், பணி ஓய்வு பெறும் நாளில் நிதி பலன்களை வழங்காமல் நிறுத்தி வைப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், வாங்கும் உபகரணங்கள் அனைத்தும் அரசு மானியத்தில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.
விடுப்பு எடுத்து போராட்டம்
நேற்று 2-வது கட்டமாக அனைத்து கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும், வேளாண் கருவிகளின் சாவிகளை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு சங்க பணியாளர்கள் திரண்டனர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கவுரவ பொதுச் செயலாளர் ஜேசுராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் தம்பிராஜ், பெனிஸ்கர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பணியாளர்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமியை நேரில் சந்தித்து வேளாண் கருவிகளின் சாவிகளை ஒப்படைத்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுமார் 450 பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்குதல், பொது சேவை மைய பணிகள், உரம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் தெரிவித்தனர்.