எடப்பாடி அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி வாடிக்கையாளர்கள் முற்றுகை
எடப்பாடி அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
எடப்பாடி:
முற்றுகை போராட்டம்
எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சங்க வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் நேற்று வங்கி முன்பு திரண்டனர். திடீரென வங்கி கதவை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த சங்க பொறுப்பு செயலாளர் மணி மற்றும் பூலாம்பட்டி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது, கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்துள்ள நகைகள், வைப்பு தொகையை திரும்ப வழங்க வேண்டும். அதுவரை வங்கி பரிவர்த்தனைகளை நிறுத்தி வைக்க வேண்டும். என்று கூறினர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.