'கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு

‘கொள்கை, லட்சியத்துக்கு இலக்கணமாக திகழ்ந்து வருபவர் ஆர்.நல்லகண்ணு' என அவரது 98-வது பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-12-26 20:42 GMT

98-வது பிறந்த நாள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாள் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, நல்லகண்ணுக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவுப்பரிசாக புத்தகம் வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது நல்லகண்ணு, மு.க.ஸ்டாலினின் கைகளை பிடித்துக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசியதாவது:-

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பொதுவுடைமை இயக்கத்தை சார்ந்திருக்கும் அரசியல் சிற்பி ஆர்.நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன். அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

அரும்பணி தொடர வேண்டும்

தமிழக அரசின் சார்பில், 'தகைசால் தமிழர்' விருது ஒவ்வொரு ஆண்டும் நமது தலைவர் பெருமக்களை தேர்ந்தெடுத்து வழங்குவது என முடிவெடுத்து, முதலாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கி பெருமைப்படுத்தினோம்.அதைத்தொடர்ந்து, 2-வது ஆண்டு நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறோம். என்னை பொறுத்தவரை தகைசால் தமிழர் விருதிற்கு பெருமை வந்து சேர்ந்திருக்கிறது என்றால் இவர்களுக்கெல்லாம் வழங்கிய காரணத்தால்தான் அந்த பெருமை இந்த விருதுக்கு கிடைத்திருக்கிறது.

98 வயதிலும், அவர் தனது கொள்கையில் இருந்து என்றைக்கும் நழுவாமல், கொள்கை, லட்சியத்திற்கு இலக்கணமாக தனது பணியை தள்ளாத வயதிலும் ஆற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த அரும்பணி தொடரவேண்டும்.

தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்

பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கக்கூடிய முயற்சிக்கு வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்கி கொண்டிருக்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கிற தி.மு.க. அரசுக்கு பக்கபலமாக இருந்து எப்படி வழிகாட்டி கொண்டிருக்கிறாரோ, அதேபோல் தொடர்ந்து அவர் வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நல்லகண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மதசார்பற்ற ஆட்சி

இதைத்தொடர்ந்து நன்றி தெரிவித்து ஆர்.நல்லகண்ணு பேசும்போது, 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை முறியடித்து போராடி பெற்ற சுதந்திரத்துக்கு மதசார்புடன் செயல்படும் மத்திய அரசால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதத்தை வைத்து இந்த நாட்டை சீரழிக்க முயற்சிக்கிறார்கள்.

இதை எதிர்த்து போராட, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக எப்படி இருக்கிறோமோ அதேபோன்று இந்த நாட்டை பாதுகாக்க ஓரணியாக செயல்பட வேண்டும். மதவெறி கொண்ட சக்திகள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது. மதவெறி சக்தியை முறியடித்து மதசார்பற்ற ஆட்சி மத்தியில் அமைய போராட வேண்டும்' என்றார்.

கொள்கையின் மறு உருவம்

நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஆங்கிலேயே ஆட்சிக்காலம் தொடங்கி மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்க போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர், தகைசால் தமிழர் நல்லகண்ணுவுக்கு 98-வது பிறந்த நாள் வாழ்த்துகள். தொண்டுக்கு இலக்கணம், தியாகத்தின் இலக்கியம், கொள்கையின் மறு உருவம், உழைப்பின் திரு உருவம் நல்லகண்ணு இன்றைய தமிழகத்தின் ஈடு இணையில்லா வழிகாட்டி. நீடூழி வாழ்ந்து இந்த நாட்டுக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன்' என கூறி உள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'இந்திய விடுதலை போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணுவின் 98-வது பிறந்தநாளில் அவர் நல்ல உடல்நலத்துடன் நீடுழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என்று கூறியுள்ளார்.

வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் நல்லகண்ணு இல்லத்துக்கு சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஆர்.நல்லகண்ணுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. யும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்