மயிலாடுதுறை பெண் தொழிலாளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மீன் சுத்தம் செய்து மகளை டாக்டராக்கி சாதனை படைத்த மயிலாடுதுறை பெண் தொழிலாளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டன்சன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ராஜாமணி(வயது 46). இவர்களுடைய மகள் விஜயலட்சுமி(24). மகன் ரவிச்சந்திரன். ராஜேந்திரன் இறந்து விட்டதால் ராஜாமணி மயிலாடுதுறை நகராட்சி மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் விஜயலட்சுமியை டாக்டராக்க வேண்டும் என நினைத்தார். அதன்படி மகளை ரஷியாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்த்து மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்தார். அங்கு 6 ஆண்டுகள் மருத்துவம் படித்த விஜயலட்சுமி தற்போது டாக்டராகி உள்ளார்.
இந்த நிலையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருக்கடையூர் வந்தார். அப்போது ராஜாமணி, அவருடைய மகள் டாக்டர் விஜயலட்சுமி ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.