பணப்பலன்களை வழங்காமல் பஞ்சாலை மூடல்
திருவாடானை அருகே பணப்பலன்களை வழங்காமல் பஞ்சாலை மூடப்பட்டு உள்ளது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னகீரமங்கலம் பகுதியில் பிளாட்டினம் நூற்பாலையை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் நூற்பாலையில் நிரந்தர பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் என ஏராளமானோர் பணியாற்றி வருகின்றோம். இந்த நிலையில் பணியாளர்கள் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்காமல் கடந்த மாதம் முதல் பஞ்சாலை மேலாளர் திடீரென்று சென்றுவிட்டார். இதனால் பஞ்சாலை இயங்காமல் உள்ளது. இதன்காரணமாக அங்கு பணியாற்றிய நாங்கள் வாழ்வாதாரம் இன்றியும் வேலைவாய்ப்பு இன்றியும் எங்களின் பணபலன்களை பெற முடியாமலும் பரிதவித்து வருகிறோம். மும்பையை சேர்ந்த அந்த நிர்வாகி 4 மாத சம்பளம் வழங்கவில்லை. பணப்பலன்களை வழங்கவில்லை. பஞ்சாலையை மூடிவிட்டார். இதனால் அங்கு பணிபுரிந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களாகிய நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம். எனவே, எங்களின் பணப்பலன்களை பெற்றுத் தருவதோடு பஞ்சாலையை செயல்பட வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
=========