துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

கிராம பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-02-25 18:52 GMT


கிராம பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில மாநாடு

தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கத்தின் முதல் மாநில மாநாடு விருதுநகரில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் முத்தையன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆதி தமிழர் கட்சி மாநில தலைவர் ஜக்கையன், தமிழ் புலிகள் கட்சி மாநில தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன், சங்கத்தின் சட்ட ஆலோசகர் சகாய பிலோமின் ராஜ் ஆகியோர் பேசினர்.

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

பணி நிரந்தரம்

கிராம பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் உள்ள பாகுபாடுகளை களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணிக்காலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். கிராம பகுதிகளில் பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் பணியிடை மரணம் அடைந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும். வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கணக்கிட்டு தாமதமின்றி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு பாதுகாப்பு உபகரணங்கள் பணி தொடர்பான கருவிகள் பாதுகாப்பு உடை ஆகியவற்றை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரேமாதிரி நிர்ணயம்

பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களை இழிவாக நடத்துவதை தவிர்க்கவும் அவர்களது சொந்த வீடுகளில் பணிபுரிய கட்டாயப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

பணி நேரத்தை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு வந்திருந்தோரை மாநில பொதுச் செயலாளர் முனீஸ்வரன் வரவேற்றார். முடிவில் மாநில துணை பொதுச்செயலாளர் அன்னமயில் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்