தூய்மை இந்தியா 2.0 திட்டம்: சென்னை சாலையை சுத்தப்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் சென்னை சாலையை சுங்கத்துறை அதிகாரிகள் சுத்தம் செய்தனர். மத்திய அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணிகள் நடைபெற்றது.

Update: 2023-10-02 04:53 GMT

சுங்கத்துறை அதிகாரிகள்

'தூய்மை இந்தியா திட்டம் - நகர்ப்புறம் 2.0' என்ற பிரசார திட்டம் நேற்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. சென்னையிலும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இந்த பிரசார செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சென்னை சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுங்கத்துறை முதன்மை கமிஷனர் (பொது) ஜி.ரவீந்திரநாத், கூடுதல் கமிஷனர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர். சுங்கத்துறை அலுவலகம் அருகேயுள்ள ஜாபர் சராங் சாலையில் கிடந்த குப்பைகளை அகற்றிய அதிகாரிகள், அங்குள்ள மேடு- பள்ளங்களை மண்ணை கொட்டி சமன் செய்தார்கள்.

மத்திய அரசு அலுவலகங்களில்...

சென்னை நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி உதவி இயக்குனர் கி.பூர்ணிமா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் - ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். கடற்கரை வளாகத்தை தூய்மைப்படுத்திய இக்குழுவினர், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மைய வளாகத்தை சுற்றிலும் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

வருமான வரித்துறை சார்பில்...

சென்னை வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் ராஜசேகர் ரெட்டி தலைமையில் தூய்மை பணிகள் நடந்தது. கமிஷனர் எம்.முரளி, இணை கமிஷனர் எம்.அர்ஜூன் மானிக், துணை கமிஷனர்கள் பி.எஸ்.அரவிந்த், இ.இளங்கோ, எம்.நிஷாந்த் ராவ் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டு கோவில் வளாகத்தில் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடந்த தூய்மை நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. டீன் (திட்டத்துறை) ஆர்.சாரதி தலைமையிலான குழுவினர் மணற்பரப்பில் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினர்.

நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் வெளிநாட்டு வர்த்தக சபை சார்பில் தூய்மை பணிகள் நடந்தது. இதில் உதவி இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ் தலைமையிலான குழுவினர் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கிழக்கு கடற்கரை சாலை நடப்போர் சங்கம் சார்பில் திருவான்மியூர் கடற்கரையில் நேற்று தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சங்க தலைவர் எம்.அருள்குமார், பொருளாளர் பி.வேணுகோபால், செயலாளர் ஆர்.தனசேகரன் உள்பட நிர்வாகிகள், வெளியுறவுத்துறை அமைச்சக பணியாளர்கள் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கடற்கரை வளாகத்தை சுத்தம் செய்தனர். இதில் போலீஸ், மாநகராட்சி ஊழியர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்தது. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் வசந்தகுமாரி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

பல்லாவரம் 12-வது ராணுவ பட்டாலியன் மெட்ராஸ் சார்பில் மடிப்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ராணுவ கர்னல் ஜேம்ஸ் ஜேக்கப் தலைமையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் மரக்கன்று, பனை விதைகளை நட்டு வைத்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் திரிசூலம் ரெயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியை விமான நிலைய ஆணையக இயக்குனர் தீபக் தொடங்கி வைத்தார். புழுதிவாக்கம் சித்தேரியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்