அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின.
அரசு கலைக்கல்லூரி
அரியலூர் மாவட்டத்தின் தலைநகரில் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. 50 ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்த இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், சுற்றுச்சூழல் அறிவியல், கணிதம் உள்ளிட்ட 13 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கடந்த 8-ந் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி 13 பாடப்பிரிவுகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர்.
புத்தொளி பயிற்சி
பள்ளிப்படிப்பை முடிந்து புதிதாக கல்லூரிக்கு வருகை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் துறையின் அவசியம் குறித்தும் தாங்கள் எடுத்துள்ள துறை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் எடுத்து கூறினர். மாணவர்கள் கல்வியில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை பேராசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்து கொள்ளாமல் புரிந்து படித்தால் என்றும் மனதில் நிலைத்திருக்கும். மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது போல் விளையாட்டு, நாட்டு நலப்பணி திட்டம் உள்ளிட்ட துறைகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் வருகை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி இன்று (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை நடைபெற உள்ளது.