மாணவி கூட்டு பலாத்காரம்: அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

ராமநாதபுரம் பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Update: 2023-03-14 11:40 GMT

ராமநாதபுரம்,

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 8-ம் வகுப்பு மாணவிைய பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வழக்கின் தன்மை கருதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

5 பேரை காவலில் எடுக்க முடிவு

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கின் தன்மை குறித்து ஆய்வு செய்ய தொடங்கிய போலீசார் வழக்கின் குற்றவாளிகளாக கருதப்படும் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட மகளிர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணையின் அடிப்படையில் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விசாரணையை மேற்கொள்ளவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்