மயானத்தை ஆக்கிரமித்துகட்டிய வீடுகள், கோவிலை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் மயானத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள், கோவிலை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-08 18:45 GMT


மயான ஆக்கிரமிப்பு

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் 4½ ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. அங்கு இறந்தவர்களின் உடலை அப்பகுதியினர் புதைத்தும், எரித்தும் வருகின்றனர். இந்த மயானத்தில் காலியாக இருந்த இடங்களை கடந்த சில ஆண்டுகளாக தனிநபர்கள், ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள், வீடுகள் கட்டியுள்ளனர். மேலும் அங்கு அங்காளம்மன் கோவிலும் கட்டப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளனர். இந்த மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தினர், அங்கு சென்று ஆக்கிரமிப்பாளர்களிடம் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளும்படி நோட்டீசு வழங்கினர். பலமுறை நோட்டீசு வழங்கப்பட்டபோதிலும் அந்த ஆக்கிரமிப்புகளை அவர்கள் அகற்றிக்கொள்ளவில்லை.

அகற்றம்

இந்நிலையில் நேற்று நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்றனர். அங்கு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட இடங்களை முதலில் அளவீடு செய்தனர். இதில் 11 வீடுகள் மற்றும் ஒரு கோவில், தனியார் கம்பெனி கட்டியிருந்த மதில் சுவர் ஒன்றும் ஆக்கிரமிப்பில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 100 மீட்டர் தூரமுள்ள அந்த சுவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். அதன் பின்னர் 2 தகரக்கொட்டகைகளும் அகற்றப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு

தொடர்ந்து, ஆக்கிரமிப்பு வீடுகள், கோவிலை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்கனவே பலமுறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், இதுபற்றி நகராட்சி ஆணையரிடம் சென்று கோரிக்கை மனு அளிக்குமாறு போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவர்களுக்கு மேலும் உரிய அவகாசம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்