புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் தியாகதுருகம் அருகே பரபரப்பு

தியாகதுருகம் அருகே புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-16 18:45 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கரீம்ஷா தக்கா பகுதியில் சுமார் 76 சென்ட் அளவிலான வாரி புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு தனிநபர் ஒருவர் மனு கொடுத்தார். அதன்அடிப்படையில் முதற்கட்டமாக நில அளவையர் உமா, கிராம நிர்வாக அலுவலர் ராதா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்ய வந்தனர். இதுபற்றி அறிந்த புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து வரும் 30-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் தனிநபரால் கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், இந்த இடத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடுகட்டி வசித்து வருகிறோம். மேலும் மாவட்ட கலெக்டரிடம் இந்த நிலத்தை எங்களுக்கு வழங்க கோரி மனு அளிக்க உள்ளோம். எனவே நிலம் அளவீடு செய்யும் பணியை ஒத்தி வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புறம்போக்கு நிலம் அளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். நிலம் அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்