"பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் கோர்ட் நிராகரித்தது தவறு" - ஐகோர்ட்டில் சசிகலா தரப்பு வாதம்
தன்னை பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை எதிர்த்து சசிகலா சார்பில் சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சென்னை,
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை பதவி நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், தன்னை பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சார்பில் சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்றுக்கொண்டு சசிகலாவின் மனுவை சிவில் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சவுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் சிவில் கோர்ட் நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு என்றும் முழுமையாக விசாரணை நடத்தாமலும், சசிகலா தரப்பு வாதத்தை முழுமையாக கேட்காமலும் வழக்கை நிராகரித்துள்ளதாகவும் வாதிட்டார்.
இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களும் நிறைவடையாத நிலையில், வாதங்களின் தொடர்ச்சிக்காக வரும் 8-ந்தேதி வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.