பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருக்குறுங்குடி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-15 20:04 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலை கோவில் சாமி சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 35) என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவரை கைது செய்யக்கோரி பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அய்யப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அய்யப்பனை சிலர் தாக்கியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி நேற்று இரவில் அய்யப்பனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மலையடிப்புதூரில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏர்வாடி, திருக்குறுங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்