காசிமேட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் ஆத்திரம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-11 06:41 GMT

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட மீனவர் காலனி குடியிருப்புகள் பழுதாகி விட்டதால் புதிய குடியிருப்புகள் கட்ட 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடிக்கப்பட்டது. அங்கு வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 18 மாதங்களில் அந்த இடத்தில் புதிய வீடு கட்டி தரப்படும் என்று கூறி ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதையடுத்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.57 கோடியில், தரைத்தளத்துடன் சேர்த்து 5 மாடிகளுடன், வீடு ஒன்று 402 சதுர அடி அளவில் 520 வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

ஆனால் 3 ஆண்டுகளாகியும் பாதி கூட பணி முடியவில்லை. இதனால் தற்போது வெவ்வேறு இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வரும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் மீன்பிடி தொழில் செய்வதற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும் சிரமமாக உள்ளது என்றும், தங்களால் வாடகை கொடுத்து வாழ முடியவில்லை என்றும் கூறி நேற்று காலை பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காசிமேடு சூரிய நாராயணா சாலை சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அதற்கு மறுத்த பொதுமக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ. வந்து உறுதி அளிக்கும் வரை சாலை மறியல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை, பெண் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

வீடு கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் ஜனவரி மாதத்துக்குள் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்