முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள், சிறுவர், சிறுமியர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி..!

திருவாரூரில் உள்ள தெருக்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார்.

Update: 2023-08-27 03:43 GMT

திருவாரூர்,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 4 நாள் பயணமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் நாகை மாவட்டம் திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

அதன்பின்னர் நேற்று மதியம் நாகையில் இருந்து காரில் புறப்பட்டு திருவாரூருக்கு வந்தார். அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவருடைய இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். மாலையில் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், இன்று காலை திருவாரூரில் உள்ள தெருக்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் முதல்-அமைச்சர் உரையாடி மகிழ்ந்தார். அதன்பின்னர் பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருவாரூரில்ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதியத்துடன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்