வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

குரும்பபாளையத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-11 20:15 GMT

பொள்ளாச்சி

குரும்பபாளையத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட டி.கோட்டாம்பட்டி அண்ணா நகரில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக தனியார் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உடனே மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து அண்ணா நகரை சேர்ந்த 31 பேருக்கு குரும்பபாளையத்தில் மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை அறிந்த அங்குள்ள மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை

அப்போது, குரும்பபாளையத்தில் வீடு, நிலம் இல்லாமல் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இங்குள்ள இடத்தை அண்ணா நகர் மக்களுக்கு கொடுக்க நினைக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள இடத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று குரும்பபாளையம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மேலும் பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கிட்டசூராம்பா்ளையத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் அண்ணா நகர் பகுதி மக்களை குடியமர்த்தலாம் என்றனர்.

அதற்கு, கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்