பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3-வது வார்டில் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-09-30 07:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் வார்டில் குடிநீர் வசதி வழங்கவில்லை, கழிவுநீர் கால்வாய் வசதி சரியில்லை, தெரு விளக்குகள் எரிவதில்லை, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் பல மாதமாக அவதி அடைவதாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

அந்த நேரத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த அதிகாரியிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். அடிப்படை பிரச்சினைகளை சரி செய்யவில்லை என்றால் தாங்கள் சாலை மறியல் செய்வோம் என்று அவர்கள் எச்சரித்தனர். சாலை மறியல் செய்யும்போது மாவட்ட கலெக்டர் வந்து உறுதி அளிக்கும் வரை தாங்கள் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்றும் தெரிவித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் வந்தவுடன் அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்