கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி மோசடி நிறுவன அதிபரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி வரை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த முதலீட்டு நிறுவன அதிபரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-16 05:45 GMT

மதுரவாயல் அடுத்த வானகரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு மாதம் 7 சதவீதம் வரை வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் பணத்தை கட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்நிறுவனத்தினர் சில மாதங்கள் வரை முதலீடு பணத்திற்கு மாதம் தோறும் வட்டி தந்த நிலையில், வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய போவதாகவும், 6 மாதங்கள் கழித்து அதிக அளவில் பணம் தருவதாக வாடிக்கையாளர்களிடம் சந்திரசேகர் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அதனை நம்பி காத்திருந்தனர். ஆனால் கடந்த பல மாதங்களாக தாங்கள் செலுத்திய பணத்திற்கு எந்தவித வட்டியும், அசலும் வராததால் மோசடி செய்யப்பட்டதை அறிந்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் சந்திரசேகர் தலைமறைவானதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.

இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததின் பேரில், கடந்த ஜனவரி மாதம் சந்திரசேகரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சந்திரசேகர் வீட்டை திடீரென முற்றுகையிட்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் உள்ளே சென்று சோதனை செய்தபோது வீட்டில் பதுங்கி இருந்த சந்திரசேகரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். ஏற்கனவே இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களையும் அழைத்து போலீஸ் நிலைய வளாகத்திலேயே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 100 கோடிக்கு அதிகமான் பண மோசடி நடைபெற்ற இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலுத்தி பணத்தை திருப்பி பெற முடியாமல் சிரமம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்