வால்பாறையில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
வால்பாறையில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
வால்பாறை
வால்பாறையில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ்
வால்பாறையில் இயேசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வந்த வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் வாழ்த்து பாடல் நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது. வால்பாறை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ திருச்சபையின் தேவாலயங்களில் உள்ள 11 சேகரங்களிலும் நேற்று நள்ளிரவில் 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. வால்பாறை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் ஆயர்கள் பால்சுந்தர்சிங், ஜான் வெஸ்லி தலைமையில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரார்த்தனையை நடத்தினார்கள். கத்தோலிக்க திருச்சபையில் வால்பாறை தூய இருதய ஆலயம், முடீஸ் புனித அந்தோனியார் ஆலயம், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலயம், சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் நள்ளிரவில் 11.00 மணி முதல் 12 வரை சிறப்பு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏசு சொரூபம்
அதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு தூய இருதய தேவாலயத்தில் பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் இருவரும் குழந்தை ஏசு சொரூபத்தை ஆலயத்தில் இருந்து பவனியாக எடுத்து வந்து குடிலில் வைத்து வணங்கினார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் வணங்கி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நடைபெறுகிறது.
இதேபோல் வால்பாறை அருகில் உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் சிறப்பாக அனைத்து மதத்தினரும் இணைந்து கிறித்தவர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார்கள்.