'குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும்'

வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-29 22:00 GMT

விழிப்புணர்வு கூட்டம்

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கென்னடி நினைவு தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜன், மாநகர்நல அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதையடுத்து மாநகராட்சி ஆணையர் பேசுகையில், டெங்கு இல்லாத நகரமாக திண்டுக்கல்லை மாற்ற டெங்கு தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் டெங்கு கொசுப்புழு அழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் அதன் உரிமையாளர்களிடம் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் விதம், அவை உருவாகாமல் எப்படி தடுக்க வேண்டும் என்று விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மருந்து ஊற்றி அழிக்க வேண்டும்

அதேபோல் வீடு, வீடாக சென்று திறந்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் இருந்தால் அவற்றை அபேட் மருந்து ஊற்றி அழிக்க வேண்டும்.

அதன் பிறகும் வீடுகளில் கொசு புழுக்கள் உருவாகும் வண்ணம் தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள் வைத்திருப்பது தெரியவந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொறியியல் பிரிவு அதிகாரிகள் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் முன்பு தண்ணீரில் குளோரின் கலந்த பின்பு தான் வினியோகிக்க வேண்டும் என்றார்.

சுய மருத்துவம் செய்யக்கூடாது

அதன் பிறகு சுகாதார இணை இயக்குனர் பேசுகையில், களப்பணியாளர்கள் தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருந்தால் மட்மே அபேட் மருந்துகளை ஊற்ற வேண்டும். பொதுமக்களும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் சுய மருத்துவம் செய்யக்கூடாது. அரசு மருத்துவமனைகளுக்கு வந்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் விதம், அவற்றை எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் செபாஸ்டின், தட்சிணாமூர்த்தி, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்