பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம்
பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை விசு திருவிழா
நெல்லை மாவட்டம் பாபநாசம் உலகாம்பிகை அம்மன் உடனுறை பாபநாச சாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகளும், ஏகசிம்மாசனம், கைலாச பர்வதம், அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலாவும் நடந்தது.
தேரோட்டம்
விழாவின் 9-ம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு சாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து காலை 10 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று தீர்த்தவாரி
10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், நாளை (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர்.