சித்திரை திருவிழா தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-04-29 22:02 GMT

சுசீந்திரம்:

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசைகச்சேரி, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு தட்டு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர், பின்னர் தாணுமாலய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

போலீசார் அணிவகுப்பு மரியாதை

காலை 8 மணி அளவில் தட்டு வாகனங்களில் சாமி மற்றும் அம்பாளும், அறம் வளர்த்த நாயகி அம்மனும், விநாயகரும் தனித்தனியாக எழுந்தருளி கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

பின்னர் சாமியும், அம்பாளும் தேரிலும், அறம் வளர்த்த நாயகி அம்மன் சப்பர தேரிலும், விநாயகர் தேரிலும் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு சந்தனம் தெளித்து, தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

அதைத்தொடர்ந்து காலை 8.20 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியே வலம் வந்து 10.20 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

தேரோட்ட விழாவில் வட்ட பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத், தெற்கு மண் மடம் ஸ்தானிகர் திலீபன் நம்பூதிரி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, செயல் அலுவலர் கமலேஸ்வரி, துணைத் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வள்ளியம்மாள், வீரபத்ரப்பிள்ளை, கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, நடுத்தெரு ஊர்வகை டிரஸ்டி ரவீந்திரன், கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர் ரத வீதிகளில் வலம் வந்த போது பக்தர்களுக்கு மோர், சர்பத் போன்றவை வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாமி தங்க பல்லக்கில் மண்டகப்படியும், நள்ளிரவு12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும் நடைபேற்றது.

தெப்பத்திருவிழா

10-ம் நாள் திருவிழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8மணிக்கு சாமி- அம்பாள், பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்