அட்டைப் பெட்டியில் குழந்தையின் உடல்: தமிழக சுகாதாரத்துறையின் கருப்பு நாள் - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விமர்சனம்

அட்டைப் பெட்டியில் குழந்தையின் உடலை கொண்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

Update: 2023-12-11 13:55 GMT

சென்னை,

சென்னையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- சென்னையில் இறந்த பச்சிளம் குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்... தமிழக சுகாதாரத் துறையின் கருப்பு நாள்!. வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி செளமியாவிற்கு கடந்த 5-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், வெள்ளத்தின் நடுவே தட்டுத்தடுமாறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

பெண் குழந்தை பிறந்து இறந்த கொடுமைக்கு நடுவே, குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 2,500 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு இறந்த குழந்தையின் உடலை சரியான முறையில் மூடப்படாமல் மருத்துவ அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் கொடுத்திருக்கிறார்கள்.

கண்முன்னே இறந்து கிடக்கும் குழந்தையை முறையாக மூடி கொடுங்கள் என பெற்றோர்களா சொல்ல முடியும்? அது, அரசு மருத்துவமனையின் கடமை அல்லவா?. எந்த தந்தையும் தன் வாழ்வில் சந்திக்கவே கூடாத கொடுமை இது. அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இந்த அரசு காப்பாற்ற தவறி விட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக 'தமிழக சுகாதாரத்துறை ஐ.சி.யூ-வில் இருக்கிறது' என தொடர்ந்து ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டி வருகிறோம். இதோ, மற்றுமோர் உதாரணம்!.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்