துலாக்கட்ட காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.;

Update:2023-10-03 00:15 IST

மேட்டூர் அணை

டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த காவிரி நீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து கல்லணையில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சாகுபடி செய்ய தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு கடைமடை பகுதிவரை சென்றது. இடையிடையே படிப்படியாக தண்ணீர் குறைக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக காவிரி ஆறு வறண்டு காணப்பட்டது.

துலாக்கட்டத்துக்கு வந்த தண்ணீர்

இதன் காரணமாக நெற்பயிர்கள் நீரின்றி வெயிலில் வாடி கருகுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி காவிரியில் தண்ணீரை திறக்க கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தாலும், விவசாயிகள் நலன் கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறைக்கு வந்தது. நேற்று காவிரி ஆற்றில் மிதமான அளவு தண்ணீர் சென்றது. நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுவர்கள் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றின் படித்துறையில் ஏறி அங்கிருந்து ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து விளையாடி மகிழ்ந்தனர்.

ஆற்றில் குளித்து மகிழ்ந்த சிறுவர்கள்

அதேபோல ஆற்றின் நடுவில் உள்ள நந்திகேஸ்வரர் கோவில் படிகளில் ஏறி நின்றும், அங்கிருந்து தண்ணீரில் குதித்து மகிழ்ந்தனர். அதில் ஒரு சில சிறுவர்கள் தெர்மாகோல் அட்டைகளை கொண்டு வந்து அதில் படுத்துக்கொண்டு நீந்தியும் விளையாடினர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்