சிறுவனை பணிக்கு அமர்த்தியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
சிறுவனை பணிக்கு அமர்த்தியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:- இளையான்குடி அருகே சிறுபாலை கிராமத்தில் குழந்தை தொழிலாளர் இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் சென்று சோதனை செய்தபோது அங்கு காரைக்கால் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய சிறுவனை வீட்டு வேலை மற்றும் கால்நடைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த சிறுவன் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டான். அவர்கள் சிறுவனை பள்ளியில் சேர்த்து படிக்க ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே சிறுவனை பணியில் அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும் அமர்த்துவது குற்றமாகும். இதை மீறும்பட்சத்தில் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.