'வீடியோகால்' மூலம் பேசி நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்தது -உறவினர்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் வீடியோகாலில் பேசி நர்சுகள் பிரசவம் பார்த்தபோது குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-21 00:02 GMT

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள ஆண்டார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 36). தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா வயது (33). நிறைமாத கர்ப்பிணி.

நேற்று முன்தினம் புஷ்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு பணியில் டாக்டர் இல்லை. அவர் ஒரு மருத்துவ முகாமுக்கு சென்று விட்டார்.

வீடியோகாலில் பேசி பிரசவம்

புஷ்பா பிரசவ வலியால் துடித்ததையடுத்து அங்கு பணியில் இருந்த நர்சுகள் டாக்டர் இன்றி பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். உடனே அவர்கள் மற்றொரு ஆரம்ப ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த ஒரு டாக்டரை வீடியோகாலில் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் அவர் வீடியோகாலில் பேசியபடி ஆலோசனை கூறினார். அதன்படி நர்சுகள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

குழந்தை இறந்தது

அப்போது குழந்தையின் கால் பகுதி வெளியே வரவே நர்சுகள் திகைத்து போனார்கள். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் புஷ்பாவை மேல்சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்து விட்டது.

சாலை மறியல்

டாக்டர் இல்லாமல் நர்சுகள் வீடியோகாலில் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. ஆத்திரம் அடைந்த புஷ்பாவின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நேற்று காலை சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக மதுராந்தகம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், செய்யூர் தாசில்தார் பெருமாள் ஆகியோரும் வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பணியிடை நீக்கம்

சுகாதார பணிகள் இயக்குனர் செல்வவிநாயகம், இல்லிடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்த டாக்டர் பாலுவை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்தார்.

2 நர்சுகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்