தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகளை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Update: 2023-10-22 18:45 GMT

கோவை

பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகளை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்

கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.779 கோடியில் பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடியில் தலைமை நீரேற்று நிலையம் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இதுதவிர மருதூர் ஊராட்சி, தண்டிபெருமாள்புரம், கட்டன்மலை ஆகிய பகுதிகளில் கட்டுமான பணிகள் மற்றும் குழாய் பதித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.

தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

இந்த நிலையில் நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்த தமிழக அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பில்லூர் 3-வது குடிநீர் திட்ட பணிகள், தலைமை நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள், அதில் பொருத்தப்பட்டு உள்ள ராட்சத மோட்டார்கள், குழாய்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சியின் 4-வது கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலைய தடுப்பணை கட்டுமான பணி மற்றும் கட்டுப்பாட்டு குழாய் அமைக்கும் பணியையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது கோவை கலெக்டர் கிராந்திகுமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, மண்டல இயக்குனர் (மாநகராட்சி) இளங்கோவன், மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் அசரப்அலி, துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி, ஆணையாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டம்

தொடர்ந்து மேட்டுப்பாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டபணிகள் மற்றும் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் எத்தனை கி.மீ. தூரத்துக்கு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறுகிறது?, எவ்வளவு குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது, பணிகள் எந்த அளவுக்கு முடிந்து உள்ளது?, மீதமுள்ள பணிகள் என்ன? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் கேட்டறிந்தார்.

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

அத்துடன் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் தற்போது நடைபெற்று வரும் பணிகள், மேற்கொள்ளப்பட உள்ள திட்ட பணிகள் குறித்து திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



Tags:    

மேலும் செய்திகள்