காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், பருவமழை தொடங்குவதற்கு முன்பு இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2022-07-06 18:56 GMT

சென்னை,

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவர், வரும் பருவமழை காலங்களில் மக்களுக்கு மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிகளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் வெள்ளத் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

முடிச்சூர் மற்றும் வரதராஜபுரம் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், வெள்ளப் பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், திட்டங்கள் தீட்டப்பட்டு வெள்ளத் தடுப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் கொளுத்துவான்சேரி சாலையில் ரூ.16 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் தந்திக்கால் கால்வாய் முதல் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய் வரை புதிய மூடுதளத்துடன் கூடிய கால்வாய் அமைக்கும் பணியில், உள்வட்ட சாலையில் அமைந்துள்ள தந்திக்கால் வாய்க்காலில் நடைபெற்று வரும் உபரிநீர் போக்கி மற்றும் கதவுகள் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர், போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயை ரூ.34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் மற்றும் ஒழுங்கியம் அமைக்கும் பணியில், உள்வட்ட சாலையில் அமைந்துள்ள போரூர் உபரிநீர் கால்வாயில் நடைபெற்று வரும் அடித்தள கான்கிரீட் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து அவர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தாம்பரம் பகுதிக்கு அருகில் அடையாறு ஆற்றுப் பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ள அபாயத்திலிருந்து தவிர்க்கும் பொருட்டு ரூ.70 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் சோமங்களம் கிளை ஆற்றிலிருந்து ஒரு புறவழி பெரு மூடு வடிகால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் எல்.எஸ்- 5970 மீட்டர் முதல் எல்.எஸ்- 19150 மீட்டர் வரை வெள்ள நீர் கடத்தும் திறனை அதிகப்படுத்தும் பணியில் வரதராஜபுரம், ராயப்பா நகர், வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் மூடுதள கால்வாய் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு, இப்பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காஞ்சீபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி, நீர்வளத்துறை முதன்மைப் என்ஜினீயர் முரளிதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை

கட்டுமான பணியிடத்தில் விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அல்லது நியமனதாரர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி பணியிடத்து விபத்து மரண நிவாரணத் தொகையை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரைக்கேற்ப வாரியத்தில் நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் விரைந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டு காலத்தில் அதாவது 7.5.2021 முதல் 31.5.2022 வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 499 பயனாளிகளுக்கு 189 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஓராண்டு காலத்தில் அதாவது 7.5.2021 முதல் 31.5.2022 வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 351 தொழிலாளர்கள் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். 30.4.2021 வரை பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு தற்போது நிவாரணத் தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்