முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுப்பது பயத்தின் வெளிப்பாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுப்பது பயத்தின் வெளிப்பாடு என்று பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கூறினார்.

Update: 2023-06-16 18:45 GMT

வேலூரில் பா.ஜ.க. மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசில் பிரதமர் நரேந்திரமோடி பல சாதனைகளை செய்துள்ளார். 9 ஆண்டு ஆட்சி சாதனையை மக்களிடம் எடுத்துக் கூறுகிறோம். இதற்கு முன்பு ஆட்சி செய்த பிரதமர்களை விட இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்கள் பயன்பெறும் வகையில் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் வகையிலான அதிக டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பிரதமர் மோடி மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசின் அம்ரூத் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு சேர்ப்பது மாநில அரசு தான். ஆனால் மாநில அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமாக நகர வளர்ச்சிக்காக உலக வங்கி மூலம் மத்திய அரசு நிதியாக மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அதை முறையாக செயல்படுத்தவில்லை.

அனைத்து மத்திய அரசின் திட்டங்களும் வேலூர் மாநகராட்சிக்கு வந்த போதும் அதன்மீது அக்கறை இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார்?. எச்சரிக்கை விடுத்திருப்பது பயத்தின் வெளிப்பாடு. எந்த எச்சரிக்கையாக இருந்தாலும் பா.ஜ.க. சந்திக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொது செயலாளர் ஜெகன்நாதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்