திருச்சியில் நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை மறுநாள் தொடங்க இருப்பதாக தி.மு.க. தலைமை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Update: 2024-03-20 15:30 GMT

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை மறுநாள் தொடங்க இருப்பதாக தி.மு.க. தலைமை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் 22-ந் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து, 23-ந் தேதி (சனிக்கிழமை) தஞ்சை, நாகை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 25-ந் தேதி (திங்கட்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலியிலும்; 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரத்திலும், 27-ந் தேதி (புதன்கிழமை) தென்காசி, விருதுநகர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் 29-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை); 30-ந் தேதி (சனிக்கிழமை) சேலம், கள்ளக்குறிச்சியிலும்; 31-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளிலும்; ஏப்ரல் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலூர், அரக்கோணம் தொகுதிகளிலும், 3-ந் தேதி (புதன்கிழமை) திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளிலும்; 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம் தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

சிதம்பரம், மயிலாடுதுறை தொகுதிகளில் 6-ந் தேதியும் (சனிக்கிழமை); 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியிலும், 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதுரை, சிவகங்கையிலும், 10-ந் தேதி (புதன்கிழமை) தேனி, திண்டுக்கல் தொகுதிகளிலும், 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருப்பூர், நீலகிரி தொகுதிகளிலும், 13-ந் தேதி (சனிக்கிழமை) கோவை, பொள்ளாச்சி தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

திருவள்ளூர், வடசென்னை தொகுதிகளில் 15-ந் தேதியும் (திங்கட்கிழமை), 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், 17-ந் தேதி (புதன்கிழமை) தென்சென்னை, மத்திய சென்னை தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரசாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் தி.மு.க. தொண்டர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்