3 பேருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கி கௌரவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதாளர்களை கவுரவித்தார்.

Update: 2022-08-22 07:33 GMT

சென்னை,

சென்னை பெரும்பாக்கதில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் 2020, 2021, 2022-ஆம் ஆண்டுக்கான தமிழறிஞர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். அப்போது, 2020-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முனைவர் ராசேந்திரன் பெற்றுக் கொண்டார். 2021-ஆம் ஆண்டுக்கான விருதை முனைவர் நெடுஞ்செழியனும், 2022-ஆம் ஆண்டுக்கான விருதை ழான் லூய்க் செவ்வியாரும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், தமிழறிஞர்கள் எழுதிய 16 புத்தகங்களை அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "3000 ஆண்டு பழமை வாய்ந்த தமிழுக்கு செம்மொழி என்று தகுதி பெற்று தந்தது திமுக அரசு தான். செம்மொழி தகுதி வழங்க வேண்டுமென கலைஞர் எடுத்த முயற்சியும், அவர் பணியையும் நாடு நன்றாக அறியும். தமிழர்கள் வாழும் இந்த தாய் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அரசு தான் நம்முடைய திமுக. மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட தலைநகருக்கு சென்னை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டியது திமுக அரசுதான்" என்று அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்