செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-06-24 09:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் செஸ் போட்டி நடைபெறும் தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதற்காக 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தில் கிரேன் உதவியுடன் இரும்பு கம்பிகளால் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாலையும் அமைக்கப்படுகிறது.

நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் வந்து செஸ் போட்டி நடக்கும் இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அரங்கம் அமைக்கும் பணிகள், சாலை சீரமைப்பு பணிகள், சுகாதார பணிகள், மின்சார வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இருவரும் போலீசார் மற்றும் ஒலிம்பியாட் போட்டிக்குழு அதிகாரிகளுடன் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நாட்களில் எந்த, எந்த இடத்தில் நுழைவு வாயில் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் நரேஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்