போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னிமலை நகரம்புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-01-25 20:23 GMT

போக்குவரத்து நெரிசலில் சென்னிமலை நகரம் சிக்கி திணறுவதால் அங்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கைத்தறி மற்றும் விசைத்தறி துணி ரகங்களுக்கு மிகவும் புகழ்பெற்றதாக சென்னிமலை நகரம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் துணி ரகங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சென்னிமலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

மேலும் ஆயத்த ஆடை நிறுவனங்களும் சென்னிமலை பகுதியில் வளர்ந்து வருகிறது. அதே சமயம் வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்னிமலை வழியாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடியில் சென்னிமலை நகரம் சிக்கி தவிக்கிறது. பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காங்கேயம், பழனி மற்றும் திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னிமலை நகரத்திற்குள் வந்துதான் செல்ல வேண்டும்.

வாரச்சந்தை

சென்னிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வாரச்சந்தை கூடும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் அதிகம் கூடுவார்கள். அது மட்டுமின்றி தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் உள்ளூர் கோவில் திருவிழா நாட்களிலும் அதிக எண்ணிக்கையில் சென்னிமலைக்கு வருவார்கள். இதனால் அந்த நாட்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியில் சென்னிமலை நகரம் சிக்கி தவிக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியூர்களில் இருந்து சென்னிமலைக்கு வருவதென்றால் பயப்படுவார்கள். ஏனென்றால் சென்னிமலை காங்கேயம் ரோட்டில் கணுவாய் என்ற செங்குத்தான மலைப்பாதை இருந்தது. இந்த பாதை வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் திணறியபடியே வரும். அடிக்கடி பல வாகனங்கள் செங்குத்தான பாதையில் ஏற முடியாமல் ஆங்காங்கே பழுதடைந்து நிற்கும். அதேபோல் சென்னிமலையின் வடக்கு பகுதியில் உள்ள ஈங்கூரில் ரெயில்வே மேம்பாலம் இல்லாமல் இருந்ததால் ரெயில் வரும்போது கேட் மூடப்பட்டால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நிற்கும்.

சுங்கச்சாவடி

இந்தநிலையில் கடந்த 1999-ம் ஆண்டில் சென்னிமலை கணுவாய் எனப்படும் செங்குத்தான மலைப்பாதை சீரமைக்கப்பட்டது. அதேபோல் ஈங்கூர் ரெயில்வே மேம்பாலமும் கடந்த 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதனால் சென்னிமலைக்கு போக்குவரத்து எளிதாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஏனென்றால் பெங்களூரு-கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலையாக மாற்றப்பட்ட பிறகு விஜயமங்கலம் மற்றும் கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டது.

புறவழிச்சாலை

இதனால் சுங்கச்சாவடியை கடந்து கோவை மற்றும் கேரளா மாநிலத்திற்குள் செல்லும் லாரிகளும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சென்னிமலை வழியாக காங்கேயம், பல்லடம், பொள்ளாச்சி சென்று அங்கிருந்து கேரளா மாநிலத்திற்கு செல்கிறது. அங்கிருந்து வரும் லாரிகளும் இதே வழியாக தான் வருகிறது.

இந்த லாரிகள் சென்னிமலை நகரத்தை கடந்து செல்லும் போது மிகுந்த போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் ஏற்படுகிறது. அதனால் இந்த லாரிகள் மட்டுமின்றி தினமும் ஏராளமாக செல்லும் சுற்றுலா வாகனங்களும் சென்னிமலை நகரத்திற்குள் வராமல் மாற்று பாதை வழியாக செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கே.பூமாலை சுந்தர்

இதுகுறித்து சென்னிமலை குமரன் சதுக்கத்தில் ஸ்டேசனரி கடை வைத்திருக்கும் கே.பூமாலை சுந்தர் என்பவர் கூறியதாவது:-

சென்னிமலையின் மைய பகுதியாக குமரன் சதுக்கம் இருந்து வருகிறது. இந்த வழியாக ஏராளமான லாரிகள், மட்டுமின்றி காங்கேயம், தாராபுரம் பகுதியில் இருந்து சம்பந்தமே இல்லாமல் ஈரோடு நோக்கி செல்லும் சுற்றுலா மற்றும் தனியார் கல்லூரி பஸ்களும் குமரன் சதுக்கம் வழியாக செல்வதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் இந்த வாகனங்கள் செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் அவர்களுக்கும் வசதியாக இருக்கும். பொதுமக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

என்.விசுவநாதன்

கொடிகாத்த தியாகி குமரன் பேரவையின் பொறுப்பாளர் என்.விசுவநாதன் கூறியதாவது:-

கைத்தறியின் காவலர் என அழைக்கப்பட்ட மறைந்த பத்மஸ்ரீ எம்.பி.நாச்சிமுத்துவின் முயற்சியால் சென்னிமலையில் கைத்தறி தொழில் சிறந்து விளங்குகிறது. தற்போது சென்னிமலை மக்களின் மிக முக்கிய தேவையாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. திருவிழா நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலுமே சென்னிமலை நகர மக்கள் போக்குவரத்து நெருக்கடியால் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்கள் என அனைவருமே போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் புகையால் நகரம் முழுவதும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கிறது. அதனால் சென்னிமலைக்கே சம்பந்தம் இல்லாமல் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல புறவழிச்சாலை அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி மட்டுமின்றி அடிக்கடி ஏற்படும் விபத்துகளும் வெகுவாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துரைசாமி

சமூக ஆர்வலர் துரைசாமி கூறியதாவது:-

சென்னிமலை நகரை சுற்றி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என நான் நீண்ட நாட்களாக அதற்கான ஆலோசனைகளுடன் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறேன். அதிக போக்குவரத்து உள்ள ஈங்கூர் ரோட்டில் சின்னபிடாரியூர் வழியாக வெள்ளோடு சாலை வரையும், அங்கிருந்து அர்த்தநாரிபாளையம் இடுகாடு மற்றும் அரசு புறம்போக்கு நிலம் வழியாக நாமக்கல்பாளையம் சாலை செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து அறச்சலூர் சாலைக்கு சென்று ரோஜா நகர், காட்டூர், உப்பிலிபாளையம் ரோடு, ஓட்டக்குளம் வழியாக கீழ்பவானி வாய்க்கால் கரையை ஒட்டி தென்மேற்கு வழியாக திருவள்ளுவர் நகர், பசுவபட்டி சாலை வழியாக சென்று காங்கேயம், பழனி பிரதான சாலையில் இணைக்கும் வகையில் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளேன். அதனால் தனியார் நில உரிமையாளர்களிடம் பேசி புறவழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீதேவி அசோக்

சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் கூறியதாவது:-

சென்னிமலை நகரத்தில் போக்குவரத்து நெருக்கடி என்பது உண்மைதான். கடந்த காலங்களில் கணுவாய் மலைப்பாதை சீரமைப்பு, பஸ் நிலையம் அமைத்தல், ஈங்கூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து மிக முக்கிய பிரதான பணிகளும் தி.மு.க ஆட்சிக்காலத்தில் செய்து முடிக்கப்பட்டது. அதேபோல் சென்னிமலையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர்கள் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்